
ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்கு வீடு கட்டித் தரும் ரஜினி!
திருவெண்காடு புதன் ஆலயத்தை சுற்றி சின்ன சின்ன கற்களை கட்டி வீடு செய்திருப்பார்கள் பக்தர்கள். இப்படி செய்தால் சீக்கிரம் வீடு கட்டலாம் என்பது ஐதீகமாம்! இப்படி கனவிலும், பக்தியிலும் நம்பிக்கையை விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திருக்கிற சாமானியர்களுக்கு ரஜினி செய்த காரியம், புதன் பெருமானே செய்த காரியமாக பட்டாலும் ஆச்சர்யமில்லை.
தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு சொந்த வீடு கட்டித் தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.
இவரது பண்ணை நிலத்திற்கு பக்கத்திலேயே இப்படி ஒரு பாக்கியம் வாய்த்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் ரஜினியின் அமைதி ஆலயம். ஓய்வு நேரத்தில் இங்கே வந்து விடுவார் அவர். திடீரென்று இந்த நிலத்தை ஒட்டியிருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனது ரசிகர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்.
தனக்காக பல வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குதான் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் அவர்.
அரை கிரவுண்ட் நிலத்தை தனித்தனியாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் அவர், அங்கு வீடுகளையும் தனது செலவிலேயே கட்டிக் கொடுக்கப் போகிறாராம்.
ரஜினியின் இந்தத் திட்டம் தொடர்பான ப்ளாஷ்பேக்கை ஒரு விரிவான கட்டுரையாகத் தந்துள்ளது தமிழக அரசியல் வார இதழ். அது…
இன்னா செய்தாரை நன்னயம் செய்து நாணச் செய்த ரஜினி!
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்! தங்களை சந்திக்க வேண்டுகிறேன்!! வாழ்க பல்லாண்டு’’ என்ற விளம்பரம் கடந்த டிசம்பர் 12ம் தேதி மாலை நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்காக வெளிவந்த விளம்பரம் இது. அந்த விளம்பரத்தைக் கொடுத்தவர் என்.எஸ்.ரமேஷ்.
ரஜினி பிறந்த நாளில் அவரை வாழ்த்தி விளம்பரம் கொடுப்பது புதிதல்ல. ஆனால், ‘என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தங்களை சந்திக்க வேண்டுகிறேன்’ என்ற வாசகம்தான் புதிர் போட்டது. விசாரித்து முடிப்பதற்குள் ரஜினியை வைத்து ஒரு படமே எடுத்து முடித்திருக்கலாம் போலிருக்கிறது.
ஆமாம்… ஏனிந்த விளம்பரம்? என்று கேட்டால், ரஜினி ரசிகர்கள் தரப்பிலிருந்து ஒருவரும் மூச்சு விடவில்லை. ஒருவர் முன் வந்தார் பலத்த நிபந்தனைகளோடு. அவர் சொன்ன தகவல் மலைக்க வைத்தது. அது ரஜினியின் பண்பை மட்டும் சொல்லவில்லை. மாண்பையும் பறைசாற்றியது.
“விளம்பரம் கொடுத்தவரை மன்னித்துவிட்டார். அவர் உள்பட 32 பேருக்கு இலவசமாக வீடுகளை கட்டி பரிசாகத் தரப்போகிறார் ரஜினி” என்ற தகவல் தெரிந்தது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால், ரஜினிக்குப் பிடிக்காது என்பதால்தான் யாருமே வாய் திறக்கவில்லை என்பதும் புரிந்தது.
எதற்கு இந்தத் திடீர் பரிசு?
‘படையப்பா’ படம் முடிந்ததும், ரஜினி தனது உதவியாளர் கிருஷ்ணராவை அழைத்தார். “என்னையே நம்பி இருந்தவர்கள், எனக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு ஓர் உதவி செய்யப்போகிறேன். அவர்கள் மொத்தம் 18 பேர்.அவர்களுக்கு நிலம் தரப்போகிறேன். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கும் எனது பண்ணைத் தோட்டத்திற்கு பின்னால் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் எல்லோருக்கும் மனம் நோகாமல் பங்கு போட்டுக்கொடுங்கள்” என்று உத்தரவிட்டதோடு சரி.
அதன்பிறகு யாருக்கு எவ்வளவு நிலம் என்று ரஜினி கணக்குப் பார்க்கவேயில்லை. இந்த 18 பேர் கொண்ட பட்டியலில் இருந்தவர்களுக்கு ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் என்று கிடைத்தது. சிலருக்கு ஒன்றரை கிரவுண்ட் நிலமும் கிடைத்தது. அதில் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தில் பொறுப்பாளராக இருந்த என்.எஸ். ரமேஷுக்கு ஒன்றரை கிரவுண்டு நிலம் கிடைத்தது.
ஏழெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிலையில் ரஜினியின் ஆத்மார்த்த நண்பர் முரளியை சிலர் சந்தித்தனர். “நாங்களும், ராகவேந்திரா மண்டபத்திலும், ரசிகர் மன்றத்திலும் இத்தனை காலமாக வேலைப் பார்த்து வருகிறோம். எங்களுக்கும் நிலம் தரக் கூடாதா?” என்று கோரிக்கை வைத்தனர்.
அடுத்த நாளே அவர்களையும் சேர்த்து, மொத்தம் 32 பேருக்கு நிலம் வழங்க உத்தரவு வந்தது ரஜினியிடமிருந்து. அப்போதுதான், தான் கொடுத்த நிலம் பற்றிய விவரங்களை வாங்கிப் பார்த்தார்.
“என்ன இது. ஒருவருக்கு அரை கிரவுண்ட். இன்னொருவருக்கு ஒன்றரை கிரவுண்ட் நிலம். ஏனிந்த பாகுபாடு. எல்லாருக்கும் ஒரே அளவில் நிலத்தைக் கொடுங்கள். நிலத்தைத் திரும்ப வாங்கி, எல்லாருக்கும் சமமாக நிலத்தைப் பகிர்ந்து கொடுங்கள்.
நிலத்தைத் திரும்பக் கொடுப்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கு அதே இடத்தில் என் காசில் வீடு கட்டித்தருவேன் என்பதைச் சொல்லிவிடுங்கள்” என்றார்.
ஏற்கெனவே நிலம் வாங்கிய 18 பேரில், 17 பேர் ‘இந்த நிலத்தைத் தந்ததே அந்த தெய்வம் தான். இடத்தை திரும்பக்கேட்டால், கொடுப்பது எங்களின் கடமை’ என்று பத்திரத்தைத் திரும்பக் கொடுத்து விட்டனர்.
நோட்டீஸ் விட்ட ரசிகர்!
‘இல்லை, இல்லை. இங்கே அரை கிரவுண்டு நிலத்தில் அனைவருக்கும் வீடு கட்டித்தரப் போகிறார் ரஜினி’ என்று சொன்னதும், எல்லோரும் கொண்டாடினார்கள், ஒருவரைத்தவிர. அவர்தான் என்.எஸ்.ரமேஷ்.
தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், பெண்கள் விடுதி கட்ட திட்டமிட்டிருந்தார் ரமேஷ். காரணம், அந்த நிலம் அருகே செட்டிநாடு மருத்துவமனை இருந்ததால். தொழில் தொடங்க இருந்த நேரத்தில், ஏற்பட்ட இந்தத் திடீர் சிக்கலில் நிலைதடுமாறி, ரஜினிக்கே நோட்டீஸ் விட்டார் ரமேஷ்.
ரமேஷ் நோட்டீஸ் ரஜினியின் ‘நோட்டிஸுக்கு’ சென்றதும், ‘முத்து’ படத்தில் பணக்கார தந்தையாக நடிக்கும் ரஜினி சிரிப்பதுபோல, நிஜ ரஜினியும் சிரித்தார். ‘ஒன்றரை கிரவுண்ட் நிலத்தை அவரே வைத்துக் கொள்ளட்டும்’ என்றார் ரஜினி. இது நடந்தது கடந்த செப்டம்பர் மாதம்.
அதன் பிறகு ரஜினியின் நட்பு வட்டத்திலிருந்தும் ரமேஷ் ஒதுக்கப்பட்டார். அப்போதுதான் வலி வந்தது ரமேஷுக்கு. பலமுறை ரஜினியைச் சந்திக்க முயற்சித்தார் ரமேஷ். ரஜினியின் இதயக்கதவு மட்டுமல்ல, ராகவேந்திர மண்டபத்தின் கதவுகூட திறக்கவேயில்லை. இந்த நேரத்தில்தான் பிறந்த நாளில் அப்படியொரு விளம்பரம். எதிர்பார்த்தது போலவே ரஜினியிடமிருந்து அழைப்பு வந்தது.
ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரமேஷ், தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். ‘நீங்கள் கொடுத்த நிலத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் கெஞ்ச, ‘எல்லாருக்கும் போல, உனக்கும் அரை கிரவுண்ட் நிலமும், அதில் வீடும் கட்டித்தரப்படும். மீதி நிலத்தைத் தர ஏற்பாடு செய’ என்றார் ரஜினி.
இதுதான் நடந்த கதை.
இதைப் பற்றி, ரஜினி ரசிகர்கள் தரப்பில் கேட்டால், வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.
‘அவர் செய்யும் நல்ல காரியங்களை பற்றி வெளியே சொன்னால், அவருக்குப் பிடிக்காது. அதை அவர் எந்தக் காலத்திலும் விரும்பியதுமில்லை. எங்களுக்காக நிலத்தையும் கொடுத்து அதில் இலவசமாக வீட்டையும் கட்டித்தருவது, நாங்கள் செய்த பாக்கியம். அந்த இடத்துக்கு ‘ரஜினி அவென்யூ’ என்று பெயர் வரப் போகிறது.
அதுவும், அவரது பண்ணை வீட்டுக்குப் பின்னால், நாங்கள் வசிப்பது கொடுத்து வைத்த விஷயம். மேலும் அங்கே எங்கள் வாரிசுகள், பேரன் பிள்ளைகள் என்று வாழப் போகிறார்கள். ‘ரஜினி கொடுத்த இடம், வீடு இது’ என்று தலைமுறை, தலைமுறையாக எங்கள் பரம்பரை பேசிக் கொண்டிருப்பதே எங்களுக்குப் பெருமை,” என்று உணர்ச்சிப்பொங்கப் பேசுகிறார்கள் அவர்கள்.
இது தொடர்பாக, என்.எஸ்.ரமேஷை தொடர்பு கொண்டு பேசிய போது, “அவர் எனக்கு எவ்வளவோ செய்துவிட்டார். அவருக்கு நான் கெடுதல் செய்வேனா? எனக்குத் தெரியாமல், என் குடும்பத்தார் நோட்டீஸ் அனுப்பிவிட்டனர். மூன்று நாள் கழித்துத்தான் இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. இந்த உண்மையை அவரிடம் சொல்ல முடியாமல் தவித்தேன். அவரை சந்திக்க முடியவில்லை. அதன் காரணமாகவே, அப்படியொரு விளம்பரத்தைக் கொடுத்தேன். பிறகு அழைத்துப் பேசினார். எல்லா விஷயங்களும் நல்லபடியாக முடிந்தது,” என்றார் நெகிழ்ச்சியாக.
தனது வீட்டில், மண்டபத்தில், ரசிகர் மன்றத்தில் தன்னோடு காலம் காலமாக உழைத்த 32 பேருக்கு வீடு கட்டி தரும் ரஜினியின் பண்பு வரவேற்கக்கூடியது. ஆனால், தன்னை எதிர்த்து நோட்டீஸ் விட்டவருக்கும் பெருந்தன்மையை காண்பித்திருக்கிறாரே!
‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்’
என்ற குறள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
அதற்காக, ரஜினியிடமே டீலா, நோடீலா விளையாட முடியுமா?”
-நன்றி: தமிழக அரசியல்
பகைவனுக்கும் அருளும் ரஜினியின் பண்பு!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment