தமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்!

Saturday, December 26, 2009 ·

ர‌ஹ்மான் என்னும் புய‌லின் வேக‌த்துக்கு ஈடுகொடுக்க‌ முடியாம‌ல் த‌டுமாறுகிற‌து இசை... இதையும் வாங்கிச்செல்லுங்க‌ள் என்று அவர் வீட்டு வரவேற்பறைவயில் வ‌‌ந்து காத்திருக்கின்ற‌ன‌ விருதுக‌ள்... இவ‌ரை ம‌ட்டும் அணைத்து அணைத்து காதலிக்கிறது புக‌ழ்... எங்க‌ளையும் கொஞ்ச‌ம் சீண்டிப்பாறேன் என்று நெருங்கி நெருங்கி வ‌ந்து ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிற‌து ஆணவ‌மும், அக‌ந்தையும்... இங்கே உய‌ர‌ம் கூட‌ கூட‌ அட‌க்க‌ம் கூடுகிற‌து... க‌ட‌மை ஏற‌ ஏற‌ பொறுமை ஏறுகிற‌து... இவ‌ரை ஒன்றும் செய்ய‌முடியாது என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிற‌து வேத‌ம் ஓதும் சாத்தான்.

தமிழகத்தில் பிறந்து, தமிழில் பேசி சந்தோசப்பட்டால் மட்டும் போதாது, அதை மேன்மேலும் உயர்த்துவது எப்படி என்று சர்வ காலமும் யோசிக்கிறார் அவர்... அதனால் தான் ஒரு ஆங்கில படத்தில் ஒரு தமிழ் பாட்டை புகுத்தி அசால்ட்டாக ஒரு அசாத்தியமான செயலை செய்திருக்கிறார்...

உலக திரை துறையினரின் உயரீய கனவு என்பதைவிட எட்டமுடியாத கனவு ஆஸ்கார்... அந்த ஆஸ்கார் விருது வாங்க அரங்கத்தின் பிரமாண்டமான மேடையில் ஏறிய இந்த தமிழன் பேசிய வார்த்தைகள் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' என்று தமிழில்... சுத்த தமிழில் கூறிவிட்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வந்தாலே ஆண்டுகணக்காய் அலப்பரையை கொடுக்கும் நம்ம ஆட்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு அப்பவும் அடக்கமாகத் தான் கைகட்டி நின்றார்... இதை காதில் கேட்ட அடுத்த நிமிடமே அனைத்துலக தமிழர்களின் காதுகளிலும் கனகாம்பர வாசனை வீசியது உண்மை... மயிற்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நின்றது உண்மை... சுற்றியிருப்பவர்களுக்கு புரியுமா, புரியாதா... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எந்த யோசனையும், தடுமாற்றமும் இல்லை இந்த தமிழனிடம்... அந்த இடத்தில் அப்படி பேசிவிட ஒரு பொதுவான மொழி தாண்டிய கலைஞனுக்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும் என்பதை நினைக்கையில் பிரமிப்பு வருவது இயற்கை... அவர் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான், அது தமிழுக்குப் பெருமை சேர்ப்பது.

இவர் நமக்கு தமிழில் வரமாய் தந்திருக்கும் 'வந்தே மாதரம்...' வரலாற்றில் பதிந்து போன ஒன்று. 'தாய் மண்ணே வணக்கம்...' என்ற மயக்கும் குரலும், மந்திர வார்த்தையும், மண‌க்கும் இசையும் கருவிலிருக்கும் குழந்தையைகூட கவர்ந்திழுக்கும் அற்றல் பெற்றது... சுபாஸ் சந்திரபோஸ் கையில் மட்டும் இது அப்போது கிடைத்திருந்தால் இன்னும் சில வருடங்களுக்கு முன்னமே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பது திண்ணம்.



எவ்வளவோ வேலை பளுவுக்கு மத்தியிலும் யாருடைய துணையுமில்லாது தன் சொந்த முயற்சியில் இதய பூர்வமாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்... அது திருக்குறளை இசை வடிவமாக்குவது... ராப் பாடகர் ப்லேஸ்ஸும் இதில் இணைந்திருக்கிறார்... இவர் 'சிவாஜி த பாஸ்' பாடியவர்... VH1 சேனலில் பாடிக் கொண்டிருக்கும் முதல் இந்தியர்... இந்த முயற்சிக்கு ர‌ஹ்மான் சொல்லும் காரணம் 'திருக்குறளின் பெருமையை அதன் தொண்மை மாறாமல் அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்து செல்ல‌ வேண்டும்...' என்பது தான். அரசியல்வாதிகள் கவனிக்க, 'அடுத்த தேர்தலில் ஜெயித்து விட...' என்பது போல் உங்கள் காதுகளில் ஏதாவது தப்பாக விழுந்து தொலைக்கப்போகிறது... மனிரத்தினத்தையும், வைரமுத்துவையும் அழைத்து ஆல்பத்தை போட்டு காட்டியிருக்கிறார் ரஹ்மான்... அதன் இறுதி வடிவம் சீக்கிரம் வந்து விடும்... இது வெளிவரும் நாளில் இளைஞர்கள் திருக்குறள் பக்கம் திரளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த ஆங்கில படத்தில் தமிழ் பாடல்... படத்தின் பெயர் கப்புல்ஸ் ரீட்ரெட்... இதன் இயக்குனர் பீட்டர் பில்லிங்ஸ்லி... படத்தின் ஒரு காட்சிக்காக இவர் ரஹ்மானிடம் கேட்டதோ ஏதாவது ஒரு ஆப்பிரிக்க ரக பாடலை... ரஹ்மான் கொடுத்ததோ கலப்படமில்லாத சுத்தமான ஒரு தழில் பாடலை... ரொமான்டிக் மெலொடியான அந்த பாடலை இசையோடு சேர்த்து எழுதியதும், பாடியதும் ரஹ்மானே... இந்த பாடலை கேட்ட இயக்குனர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை... கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் படத்தின் வெற்றிப்பாடல் ஆகிவிட்டது.



மஹாராஷ்ட்ராவில் மாட்டு வண்டி கவிழ்ந்ததை மறுநாள் மத்தியானம் வரை காட்டி, மாட்டு வண்டிகாரனிடம் மாஞ்சி, மாஞ்சி பேட்டியெடுத்து எக்ஸ்குளூசிவ் என்று போடுவதும், இந்த மட்டுவண்டி விபத்து நடக்கும் என்று நேற்றே தெரியும் என்றும், இதற்காக ஆளும் கட்சி மந்திரியையும், எதிர்கட்சி எம்பியையும் உட்கார வைத்து யாரை பதவி நீக்கம் செய்யலாம் என்று காரசாரமாய் விவாதிக்கும் NDTV, CNN IBN, Times Now போன்ற‌ ஆங்கில டிவி வகையராக்கள், அன்று உலக அதிரடி நாயகன் ஜாக்கிஜான், உலக நாயகன் படத்துக்காக சென்னை வந்தபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... பிரத்தியேமாகவெல்லாம் இதை காட்டவில்லை... வெரும் செய்தியாகத்தான் காட்டினார்கள்... தமிழ் வளர்வது எப்போதும் அவர்களுக்கு பிடிக்காது, அதன் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் அவர்கள் ரஹ்மானிடம் வயிற்றெரிச்சலில் கேட்ட கேள்வி 'எதற்காக ஆங்கில படத்தில் தமிழ் பாடல் போட்டீர்கள்...' என்பது தான்.

உள்ளூர் கதையை முதலில் பாரு, வெளியூர் கதையை அப்புறம் பார்க்கலாங்கற மாதிரி, ரஹ்மான் விசயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள்... உளியின் ஓசையின் சிற‌ந்த‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா விருது உட்ப‌ட‌ எந்த‌ விருது என்றாலும் மெள‌ண்ட் ரோட்டில் மாநாடு ந‌ட‌த்திவிடுகிற‌ க‌லைஞராக‌ட்டும், க‌ட்சியை களைத்து விட்டு கொட‌நாட்டில் குடியேறிவிட‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌துபோல் தோன்றும் புரட்சித் தலைவியாகட்டும், தமிழ், த‌மிழ் என்று தின‌ம் வாயல் த‌ண்டால் எடுத்து கொண்டிருக்கும் ம‌ருத்துவராகட்டும், ஆஸ்கார் என்கிற‌ அசாத்திய‌ உய‌ர‌த்தை எட்டிவிட்ட‌ ஒரு த‌மிழ‌னை இவ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ளாத‌து ஏன்? விழா எடுத்து கெள‌ர‌விக்காத‌து ஏன்? ஒருவேளை ர‌ஹ்மான் அர‌சிய‌லுக்கு வ‌ந்து விடுவாரோ என்கிற‌ அவ‌ச‌ர‌ புத்தியா... வ‌ள‌ர்த்து விட்ட‌வ‌ர்க‌ளெல்லாம் த‌லையில் ஏணியில்லாமல் ஏறி ஆணி அடிக்கிறார்களே அது போல இவரும் ஏதும் செய்துவிடுவார் என்று பயமா... எந்த கண்றாவியாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சொல்... தழிழுக்காக பேசுவதை நிறுத்துங்கள்... ரஹ்மானைப்போல் சத்தமில்லாமல் செய்து காட்டுங்கள்.

அல்லா ரெக்கா ரஹ்மான் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டும், நன்றாக மென்மேலும் வளரவேண்டும்... தமிழ் அவரால் இன்னும் பல உச்சிகளை தொட வேண்டுமென மார்கழி வாழ்த்துகிறது... நீங்க‌ளும் வாழ்த்துங்க‌ள், வாழ்த்து வாழ‌ வைக்கும்!

அந்த ஆங்கில படத்தின் ரஹ்மானின் தமிழ் பாடல் கீழே:

குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே
குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

சிறு சிறு பெண் நிலவே... என் துணை ஆவாயோ
சிறு சிறு பெண் நிலவே... என் பசி தீர்ப்பாயோ

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

குறு குறு கண்களிலே... இதோ இதோ அவள்...

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"